மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார

முன்னாள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.

பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு 2016ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுஷ்மா சுவராஜ் 1953 பிப்ரவரி 14ம் தேதி பிறந்தவர். 1973ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்துள்ளார். தொடர்ந்து 7 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த பாஜ தலைமையியான மத்திய அரசில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் வெற்றி பெற்று 2014 மே 26ம் தேதி முதல் 2019 மே 30ம் தேதி வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, வெளியுறவுத்துறை பொறுப்பு வகித்த 2வது பெண் அமைச்சர் இவர்.

கடந்த முறை அமைச்சராக இருந்தபோதே உடல் நலக்குறைவு காரணமாக அவரது துறை பணிகளை முழுமையாக அவரால் கவனிக்க இயலவில்லை. இதனால் இந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த 1977ம் ஆண்டு, அதாவது, 25 வயதிலேயே ஹரியானாவில் மிக இளம் வயது காபினட் அமைச்சராக பதவி வகித்த பெருமைக்கு உரியவர். இதுதவிர, 1998 அக்டோர் 13ம் தேதி முதல் 1998 டிசம்பர் 3ம் தேதி வரை டெல்லி முதல்வராக பதவி வகித்துள்ளார். இதுமட்டுமின்றி, 15வது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், தகவல் தொடர்பு துறை ஆகியவற்றில் அமைச்சர் பொறுப்பு வகித்துள்ளார். இவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜ தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.