#இராஜபாளையம் #குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு

குருசாமி கோவில், இராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது.

குருசாமி அவர்களின் பூர்விகம், பெற்றோர்களைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை.

இவர் 12,000 ஆண்டுகளாக பழனிமலையில் தவம் செய்துவந்தார்; முதலில் இவருக்கு போகர் சித்தரின் தரிசனம் கிடைத்தது; அவரது வழிகாட்டுதலின் படி,தொடர்ந்து தவம் செய்தார்; அதன் பிறகு,
ஒருநாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்தார்.

கடவுள்களில் சிவ தரிசனமும், முருக கடவுள் தரிசனமும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது; பல கோடி ஆண்டுகள் தவம் இருந்து இன்னும் சிவ தரிசனம் பெறாமல் தவிப்பவர்கள் பல கோடி பேர்கள்;

முருக கடவுள் இவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்;

அதற்கு “பழனிமலையான இங்கேயே தங்கள் திருவடிகளிலேயே இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கின்றார்; அதற்கு முருகன் வரம் கொடுத்தார்;

“நீ குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இல்லத்தில் பிச்சை ஏற்று உண்பாய்! பிச்சையளித்த பெண் உன்னிடம் பிள்ளை வரம் கேட்பாள்;நீயும் பெண் குழந்தை பிறக்க வரம் அளிப்பாய்; அப்பெண் குழந்தை உன் வளர்ப்புமகளாகி உனக்கு பணிவிடை செய்யும். அக்குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நீயே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வாய்.

நீ ஜீவ ஐக்கிய சமாதி அடைந்தபின் உன் வளர்ப்பு மகளும் அவர் தம் கணவரும் உன் சமாதியைப் பராமரித்து வருவார்கள். அவர்கல் காலத்திற்குப் பின் அவர்கல் பிள்ளைகள் வழிவழியாகப் பராமரித்து வருவார்கள்.

நீ ஜீவ சமாதி அடையும் இடம் சிறப்புற்று விளங்கும்.நாள் தோறும் உச்சிக்கால பூஜையில் உனக்குக் காட்சியளிப்பேன். தென் அழகாபுரி நோக்கிச் செல்” என வரம் அளித்தார்.(தென் அழகாபுரி என்பது இன்றைய ராஜபாளையம்)

குருசாமி காசியிலும் பழனி மலையிலும்பல காலம் தவம் மேற்கொண்டார் என்பதற்கு அக்கால ஒயில் கும்மியே சான்று!!!

காசியில் கன கோடி காலம்
ஆற்றங்கரையில் அநேக கோடி காலம்
பன்னிரெண்டாயிரம் வருஷம் பழனிமலையில்
நேர்த்தியதாகவே சாலியர்
கோத்திரம் நிலை நிறுத்த வந்த குருநாதன். . .

குருசாமிகளின் வளர்ப்புமகளின் பெயர் ‘அன்னை பழனியம்மாள்’ஆகும். அவரது கணவரின் பெயர் ‘அய்யா அனஞ்சனேய பெருமாள்’ ஆகும். இவர்களின் வாரிசுகள் மூன்றுபேர்கள் ஆவர். சி.சிவகுருநாதன் பூசாரி வகையறா; ரெ.சிவஞானம் பூசாரி வகையறா; சி.குருவாரெட்டியார் பூசாரி வகையறா
இந்த மூன்று வம்சாவளியினர் இன்றும் குருசாமி கோவிலின் பூசாரியாக தொண்டுபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 800 ஆண்டுகளாக பரம்பரையாக பூசாரியாக முறை வைத்து பூஜித்து வருகின்றார்கள்;

குருசாமி அவர்கள் ஆனிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜீவ ஐக்கியம் ஆனார்கள். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் நின்ற நாளில் பிற்பகல் 3 மணியளவில் சுவாமிக்கு ஆண்டுகுருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. அன்றும், ஒவ்வொரு கார்த்திகைக்கும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

குருபூஜை முடிந்து ஒரு மண்டலம் கடந்து(40 நாட்கள் கழித்து) ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் 7 ஆம் தேதியில் குருநாதரின் சீடர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சாலியர்களின் தெருக்கள் வழியே நகர்வலம் வந்து குருசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுவருகின்றனர்.

ஏனெனில்,குருசாமி ஜீவ ஐக்கியமான 40 நாளில் லிங்கம் அமைக்கப்பட்டது; அதனால் 40 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது. எனவே, ஆவணி 7 ஆம் தேதியானது பாலாபிஷேக நாளாகவும் இருந்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் குருசாமி கோயிலுக்கு வந்து வழிபடுபவர்க்கு பணக்கஷ்டம் நீங்குகிறது; ஓராண்டுக்கு மேல் தினமும் குருசாமி கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்களின் குடும்பக்குறைகள், நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகின்றன என்பது அனுபவ உண்மை.

ராஜபாளையம் நகரில் அமைந்திருக்கும் குருசாமி கோவிலுக்குள் வரும் போது ஒவ்வொருவரும் குறைந்தது 12 முறை வலம் வர வேண்டும்; அதன் பிறகே குருநாதனை தரிசிக்க வேண்டும்;அப்படி வலம் வரும் போது முருகக் கடவுளின் மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்க வேண்டும்;

முருகா, முருகா என்று ஜபிக்கலாம்;

ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ என்று ஜபிக்கலாம்;

கந்தா, கந்தா என்று ஜபிக்கலாம்;

பழனியாண்டவா, பழனியாண்டவா என்றும் கூட ஜபிக்கலாம்;

சண்முகா, சண்முகா என்று ஜபிக்கலாம்;

சிவலிங்க வடிவத்தில் குருநாதன் இருப்பதால் சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;

இன்றும் கூட தனது வம்சாவழியினர் பலருக்கு கனவிலும், நேரிலும் குருநாதன் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

இன்றும் கூட பலர் இவரது ஜீவசமாதிக்குள் வந்ததும் இவரது அருளைப் பெற்று ஆன்மீகத்தில் அடுத்த லெவலுக்கு முன்னேற்றம் அடைகின்றார்கள்;

தினசரி காலையில் நடைபெறும் அபிஷேகத்திற்கு பால் அன்பளிப்பு செய்யலாம்;

இங்கே தாமாகவே விருப்பப் பட்டு அன்னதானம் செய்யலாம்; கோவில் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்கவும்;